Thursday 27 August, 2009

காதல்





தொடர்ச்சியற்ற பயணம்
என்று தெரிந்தும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது பயணங்கள்
அவளது நினைவுகளோடு




அவள் என்றோ
தொலைத்து விட்ட
என் நினைவுகளை
எதிர்பாராத சந்திப்பில்
எனது விழிகளில்
தேடிக்கொண்டிருக்கிறாள்




நீ
என்னை மறந்துவிடு
வலிகளோடு வார்த்தைகளையும்
வீசிச்சென்றுவிட்டாள்

Monday 13 July, 2009

பதிவுலக நண்பர்களுக்கு

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு மூன்று வார விடுப்பில் நான் இந்தியா வந்துருக்கிறேன் அதனால் உங்களது பதிவுகளை படிக்கவும் பின்னுட்டம் இடவும் வாய்ப்புகள் குறைவு . எங்களது ஊரில் திருவிழா பதினான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது நண்பர்கள் அனைவரும் வந்து அரியநாச்சியம்மன் அருளை பெற்றுச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்

Saturday 4 July, 2009

அகோர உருவம்



நிசப்த இரவொன்றில்
அனுமதியுடனே மின்சாரம்
விடை பெற்றுக்கொண்டதில்
மெழுகுவர்த்தியின் சுடரையே
சுற்றியது பெயர் தெரியாத
பூச்சியொன்று
நீண்ட இரு கைகளில்
ஒன்று இறகு பற்றி
ஒவ்வொரு பாகமாக சுடரின்
தீயில் வாட்டிய பின்
அறை அதிரும் வண்ணம்
சிரித்து விட்டு அடங்கியது
அந்த உருவம் என்னுள்

Friday 12 June, 2009

ஜாதிகள் இல்லையடி பாப்பா ?

நீண்ட நாட்களாக என்னுள் எழுந்த ஒரு கேள்வி ஜாதிகள் இல்லையடி பாப்பா இந்த வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தான் இருக்கிறது பள்ளிக்கூடத்தில் கூட ஜாதிகள் இல்லை என்ற நிலைமை இல்லை .மாணவர்களுக்கு யூனிபாம் எதற்காக கொடுக்கப் படுகிறது எல்லோருமே சரிசமம் என்பதை மாணவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் .இது எல்லா விசயத்திலும் கடைபிடிக்கப்படுவதில்லை .மாணவர்களுக்கு மாணவர்களாக இருக்கும் வரை அவர்களுக்கு ஜாதிகள் தெரிவதில்லை . அவர்களிடம் ஜாதிச் சான்றிதல் கேட்கும் போதுதான் ஜாதியே தெரிய வருகிறது

ஜாதி ஒழிப்பை சமுதாயத்தில் தொடங்கியதற்குப் பதில் பள்ளிகளில் தொடங்கியிருந்தால் இருந்தால் இன்று ஜாதியே இருந்திருக்காது என்பது எனது கருத்து . கலப்புத்திருமணங்களால் ஜாதிப் பாகுபாடு ஒழித்துவிடலாம் என்று சொல்லுகிறோம் ஆனால் கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் குழந்தைககுக்கு கூட ஜாதி சான்றிதல் இங்கு கேட்கப்படுகிறது .

மாணவர்கள் மத்தியில் சில விஷயங்கள் ஜாதிப் பாகுபாடை ஏற்ப்படுத்துகிறது என்றே எனக்கு தோன்றுகிறது . அதற்கு ஒரு உதாரணம் பத்தாவதோ ,பனிரெண்டாவதோ முடித்தபின் அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு . இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் இருவரும் வெவேறு ஜாதியை சேர்ந்தவர்கள் வசதி என்று பார்த்தால் இரு வருடயதும் சமமே .மதிப்பெண் அடிப்படையில் இருவரும் சமமே .ஆனால் ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் மருத்துவத்துரையோ , பொறியியல் துறையோ கிடைத்து விடுகிறது மற்றொரு மாணவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் .அதற்காக இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நான் . இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை .

இதற்கு எல்லாம் என்ன தீர்வு எதோ எனக்கு தெரிந்த தீர்வை முன்வைக்கிறேன் பள்ளியில் இருக்கும் சான்றிதலில் பிற்படுத்தப்பட்டவர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ,தாழ்த்தப்பட்டவர் என்று இருப்பது போல் எந்த ஜாதியையும் சாராதவர் என்றும் ஒரு கட்டம் இருக்க வேண்டும் .எந்த சாதியையும் சாராதவர்களுக்கு மற்றவர்களை விட சலுகை அதிகம் இருக்க வேண்டும் . முக்கியமான விஷயம் எந்த ஜாதியையும் சாராதவர் என்று குறிப்பிடுபவர்களின் தாய் தந்தையர் கலப்புத்திருமணம் செய்திருக்கவேண்டும் . இவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் இதே போல் கடைபிடிக்க நிர்ப்பந்திக்கப்படவேண்டும் .அப்போதுதான் நாளடைவில் ஜாதிகள் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பது என் கருத்து .

. ஜாதிகள் இல்லையடி பாப்பா இல்லாமலே இருந்திருக்கலாம் .

Monday 8 June, 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது - 2


என் காதல்



ஏழாவது படிக்கும்போது

இடைவிடாது பேசிய உன்னை

பார்த்த நான் பைத்தியம் என்றேன்

இன்று

உன்மீதான என் காதலை

என் மௌனங்களால் சிதைத்துக்கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்

நீ வரும்போது

வைரமுத்து கவிதை வரிகள் போல்

என் பிம்பம் விழுந்து கண்ணாடி

உடைந்ததோ இல்லையோ

உன் பிம்பம் விழுந்து

என் இதயம் உடைந்தது


எனக்காக நான் வாங்கிய

எந்தப் பொருளும்

என்னிடம் அதிக நாள் இருந்ததில்லை

தானமாக கொடுத்துவிடுவது

பிறர் தனதாக்கிகொள்வது

உனக்காக நான் வாங்கிய

ஒரு பொருள்

ஆறு வருடங்களாக என்னிடமே....


Sunday 17 May, 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது 1

தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில்
கவிதையில் தொலைதலும் பின்
மீட்தலும் நித்தம் நிகழும் நிகழ்வு .
பின் எங்கு தேடியும் கிடைக்க வில்லை
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....

Friday 1 May, 2009

கேள்வியும்... பதிலும் ...

இது ஒரு தொடர் பதிவு இந்த தொடர் பதிவை ஆரம்பித்தது

நிலாவும் அம்மாவும் அவர்கள் அவர்களுக்கு என் நன்றிகள் . அதன் பின் எனக்கு தெரிந்து தொடர்ந்தவர்கள்

ரவீ

அத்திரி

கடையம் ஆனந்த்

கார்த்திகை பாண்டியன்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் கார்த்திகை பாண்டியன் அவர்கள் இந்த கேள்விக்கு யோசிக்க வேண்டியது இல்லை மனசுல தோனுனத எழுதுறேன்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் .குமாரெட்டியாபுரம் என்பது எனது சொந்த ஊர் அதை சுருக்கி குமரை .நிலாவன் எனக்கு மட்டுமே தெரிந்த நண்பன் என்னை மட்டுமே தெரிந்த நண்பன் . ரெம்ப பிடிக்கும் .

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கண்ணிரில் வெளிப்படும் அளவிற்கு துக்கம் ஏற்படவில்லை .மனதுக்குள்ளே அழுதுக்குவேன்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்து கோழி கிண்டின மாதிரிதான் இருக்கும் ஆனாலும் என்ன விட என்னோட கையெழுத்த யாரும் அழகா எழுத முடியாது அதனால பிடிக்கும் .

4.பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார் ,ரசம் ,வத்த குழம்பு ,இரண்டு வகை கூட்டு,தயிர் இது எல்லாம் பிடிக்கும்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சநேரம் பேசிப்பார்ப்பேன் விட்டுக்கொடுக்கிற மனசு இருந்திச்சினா நட்பை வைத்துக்கொள்வேன் அப்படி நட்பு வைத்துக்கொண்டால் எந்த நிலையிலும் தொடரனும்னு நினைப்பேன் .

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும் ஆனா கடல்தான் அதிக தடவை குளிச்சிருக்கேன் திருச்செந்தூர் கடலுக்குத்தான் அடிக்கடி செல்வதுண்டு . வருடம் ஒரு தடவை எங்கள் ஊரில் இருந்து பாதயாத்திரை செல்வோம் இரவும் பகலும் நடந்து அங்கு சென்றவுடன் கடலில் கால் நனைத்ததும் ஏற்ப்படும் உணர்வு இருக்கிறதே ......

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண் ,உடைகள் .

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது : தன்னம்பிக்கை எங்க அப்பா மாதிரி .

பிடிக்காதது :பல தடவை யோசிச்சி ஒரு செயல செய்து விட்டு மறுபடி மாத்தி செய்கிறது ,அடக்கி வைத்த கோபம் சில நேரங்களில் வெளிப்பட்டு விடுவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

வந்த அப்புறம் சொல்றேன் .

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அம்மா , அப்பா பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்,அந்த ரெண்டு ஜீவன்களுக்கு பக்கத்துல இருந்து எதையும் செய்ய முடியலைன்னு சொல்ல முடியாத வலியோட இருக்கிறேன் .

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

அடர் நீல நிறம் .

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

யாரடி நீ மோகினி திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அந்தி வானத்தின் நிறம் ,கடலின் நீல நிறம்

14.பிடித்த மணம்?

மழைத்துளி விழுந்த பிறகு ஏற்படும் மண்வாசனை , மல்லிகை மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தேவா : எங்க இருந்துதான் தகவல்களை சேகரிப்பார் என்றே தெரியாது அவ்வளவு தகவல்கள் அவரது பதிவில் இருக்கும் .அவர் கொடுக்கும் கவிதை தேநீர் சுவைக்க அருமையாக இருக்கும் . நல்ல மனிதர் .

சிந்துகா : குழந்தைத்தனம் மாறாமல் எழுதக்குடிய நல்ல சகோதரி . பங்களாதேசில் இருந்து எழுதுகிறார் .கவிதை நல்லா இருக்கும் .

ச . ராமானுசம் : அருமையாக கவிதை எழுதுபவர் .நல்ல நண்பர் ,அகழ்வாராய்ச்சி கவிதை எனக்கு பிடித்த கவிதை

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

கார்த்திகை பாண்டியன் அவர்களின் திரைவிமர்சனங்கள் எனக்கு பிடிக்கும் .

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட் . கிரிக்கெட் ,வாலிபால் ,பேட்மிட்டன் எல்லாம் விளையாடுவேன் .

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை .

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதை பாதிக்கும் விதத்தில் இருக்கணும் , இல்லைன்னா போரடிக்காம போகனும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பூ .

21.பிடித்த பருவ காலம் எது?

கோடைகாலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

காதல் படிக்கட்டுகள், ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர் புத்தகமாக.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பவாது மாத்துவேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அதிகாலை இயற்கையின் இசை

நகர வாழ்க்கையின் சத்தம் .

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்ப இருக்கிற மலேசியாதான்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.எல்லாத்தையும் ரசிக்க தெரியும்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன்னோட சுயநலத்திற்காக மத்தவங்கலோட சுயத்தில் தலையிடரத என்னால ஏற்றுக்கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எப்பவாது என்னுள் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை . இது சரி இல்லீங்க

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெளிநாடுகளை சுற்றிப்பார்க்கனும், இந்தியா முழுவதும் சுற்றிபார்க்கனும்னு ஆசை, பார்த்ததில் பிடிச்சது கன்னியாகுமரி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சந்தோஷமா இருக்கணும் .

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கேள்வி நமக்கு செல்லாது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சென்றதினி மீளாது மூடரேநீர்

சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!


இது மகாகவி பாரதியார் கூறியது.
முடிந்து போனத விட்டு விடுவோம். நம்மளால முடிந்த அளவுக்கு நல்லதை செய்வோம்.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர்கள்
தேவா

சிந்துகா


ச.ராமானுசம்

Wednesday 22 April, 2009

ஈழ மக்களுக்காக ...

பாருங்கள் இந்த அவலத்தை













இவர்களா நீங்கள் என்றோ இழந்த இழப்பிற்கு காரணம்
நீங்கள் கொடுக்கும் பணமும் ஆயுதமும் இராணுவ உதவியும் அங்கு வாழும்
அப்பாவி மக்கள் மீது ஒரு பெரிய பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது .
சக்கரை சுரேஷ் சொன்னது போல் ...
மக்களே சிந்தியுங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
உங்களது ஒற்றுமையே
அங்கு எஞ்சியுள்ள மக்களை காப்பாற்றும்.
அப்பாவி மக்களை காக்கும்
ஒரே நோக்கத்தோடு அமைதிப் பேரணியில்
கலந்து கொள்ள வாரீர் வாரீர்
மே பத்தாம் தேதி ஒரே குடையின் கீழ் .
பி . கு :பதிவர்களுக்கு இது ஒரு பதிவர் சந்த்திப்பாக அமைந்து விடாமல் மக்கள் சந்திப்பாக அமைக்க முயலுங்கள்

Friday 10 April, 2009

தமிழனென்று சொல்லடா ....

தலைநிமிர்ந்து நில்லடா ....



ஒரு இனத்தையே அழிக்கத் துடிக்குமொருவனின்
கைக்கூலியாக மாறிப்போன
கருணா ஒரு தமிழன் ...
போராட்டங்களின் மூலமாவது தம் இனம்
அழிவதை தடுக்க வேண்டும் என்ற நன்பிக்கையில்
போராடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில்
இன்னொரு நாட்டின் இறையாண்மையில்
ஓரளவுதான் தலையிட முடியும்
என்று அறிக்கை விடும்
தமிழினத்தின் மூத்த தலைவர்
கருணாநிதி ஒரு தமிழர் ...
சூழ்நிலைக்கைதியாய் இருக்கும் எங்களை
அடிமைகள் என நினைத்து
ஞாயிறுகளில் கூட வெளியே செல்ல
அனுமதி மறுக்கும் எங்கள்
முதலாளி ஒரு தமிழர் ...
இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு
இருக்கும் நானும் ஒரு
தமிழனென்று .....
எப்படி பெருமைப்பட்டுக் கொள்ள ...


இயலாமையின் வெளிப்பாடு



Thursday 9 April, 2009

காத்திருக்கிறேன் ...



பொருளாதாரத்தை தேடிச் சென்ற
நீ
எங்கே என்னை தொலைத்து விடுவாயோ
என்ற பயத்தோடு காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
தனிமை என்னை தனிமைப்
படுத்தும் முன்
என் எதிர்பார்ப்புகளும்
வற்றிவிடும் முன்
அதைவிட
எந்தவொரு காரணமும் கூறி
தவிர்க்க முடியாமல்
உன்னையொத்த ஒருவன்
என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்

Wednesday 1 April, 2009

பதிவர்களுக்கு ....

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு நான் பதிவு செய்த ஹிந்தி பதிவு பற்றி சில விமர்சனங்கள் எழுந்துள்ளது .அந்த பதிவில் எனக்கு ஏற்பட்ட சின்ன பதிப்பை மட்டுமே எழுதி இருந்தேன்
அதற்கு ஒரு பதிவு நண்பர் ஒரு பதிவு போட்டுள்ளார்
http://vizhithezhuiyakkam.blogspot.com/
அன்பு நண்பருக்கு நான் என்னுடைய பார்வையில் எழுதிய விஷயம் . என்னுடைய மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளவோ ,உலக அனுபவத்தை பெற்றுகொண்டவன் என்று பிற்றிக்கொள்ளவோ எழுதவில்லை என்று பணிவாகக் கூறிக்கொள்கிறேன் . நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நான் ஹிந்தி வெறியனுமில்லை தமிழ் தெரிந்திருக்க வேண்டிது இல்லை என்றும் நான் கூறவில்லை . தமிழனாய் பிறந்தால் தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் . தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை . தமிழ் கட்டாயமாக கற்பிக்கப் படவேண்டும் . எனக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தும் அது கிடைக்காமல் போனதே என்ற ஆதங்கத்தில் தான் இந்த பதிவை எழுதினேன் .
ஹிந்தி படிப்பதில் தவறில்லை .ஹிந்தி படித்திருந்தால் நான் அதை செய்திருப்பேன் இதை செய்திருப்பேன் என்றும் சொல்லவில்லை .என்போன்று கிராமத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக எந்த ஒரு மொழியையோ இல்லை வேறு சில பாடங்கள் போன்ற தனிப்பட்ட விஷயங்களையோ கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவு .இப்படி தனிப்பட்ட விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் அதிகமாக செலவு செய்து பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு சென்று கற்க வேண்டும் . இது எங்கள் நடைமுறை வாழ்க்கையில் சாத்திய மில்லை . இது எங்களுடைய இயலாமை தான் ஒத்துக்கொள்கிறேன் . இந்த இயலாமை கடைசி வரை இயலாமையாகவே இருக்க வேண்டுமா என்ன .
வேறு மாநிலங்களுக்கோ அல்ல வேறு நாட்டிற்கோ வேலை தேடி செல்லும்போது அந்த மாநிலத்தின் அல்லது அந்த நாட்டின் வழக்கு மொழியை தெரிந்து கொண்டுதான் செல்லவேண்டும் என்றால் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து . இன்றும் வேறு மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ வேலை செய்யும் நம்மவர்கள் அந்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வழக்கு மொழி தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
நான் எழுதிய ஹிந்தி பதிவு பல கருத்துக்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தததில்
எனக்கு சந்தோசமே ...
பி . கு : இந்த பதிவு என்னுடைய சொந்த கருத்துகள் தான்


Monday 30 March, 2009

ஹிந்தி ......

பட்டாம் பூச்சி விருதை வேற கொடுத்துட்டாங்க இனிமே பதிவு போடாம இருந்தா அந்த விருதுக்கு மதிப்பே இல்லாம போயிடும் . (யாரோ சுரேஷ் கிட்ட
சொல்லி இருக்காங்க இப்படிஎல்லாம் உசுப்பேத்தினாதான் அடிக்கடி பதிவு போடுவாங்கன்னு.... இது சும்மா ) இப்ப பதிவுக்கு வருவோம் நான் ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே டெஸ்ட் எழுத ( நாங்களும் எல்லாம் ட்ரை பண்ணிட்டுதான வந்துருக்கோம் ) செகந்தரபாத் போயிருந்தேன் அங்க ரயில விட்டு இறங்கினதும். ஒரு ஹோட்டல்ல ரூம் போடலாம்னு ஹோட்டல் தேடி போனேன் அங்க ரிசப்சன் பக்கத்துல போனேன் அவங்க எதோ ஹிந்தில கேட்டாங்க நமக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே ஒன் ரூம் ப்ளீஸ் சொன்னேன் அவங்களுக்கு புரியல போல ஒன்னு ஹிந்தில பேசறாங்க இல்லன்னா தெலுங்குல பேசறாங்க.இங்கிலிஷ்ல பேசினா எதோ பதில் சொல்லி இருக்கலாம் .(அதுக்காக இங்கிலீஷ் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு யாரும் நினைக்க வேண்டாம் ).அங்க உள்ள மக்களும் ஒன்னு தெலுங்கு பேசறாங்க இல்லன்னா ஹிந்தி பேசறாங்க .
ஒருவழியா ரூம் கிடைச்சி டெஸ்ட் எழுதி முடிச்சாச்சி (எப்படி எழுதினேன்னு கேக்க கூ டாது ) திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தேன் அப்போ என்னோட கம்பாட் மேண்டுல முனு நாலுபேர் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர் அவங்க M C A , M Sc யோ படிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டேன் . தற்செயலா அவங்க மார்க்சிட்ட பார்க்க நேர்ந்தது அதில் language ல பர்ஸ்ட் தெலுங்கு , செகண்ட் இங்கிலீஷ் , தேர்டு ஹிந்தி என்று இருந்தது . இப்ப என்ன மேட்டருன்னா இப்படி நமக்கும் இருந்திருந்தா நாமளும் படிச்சிருப்போம். ஆனால் அந்த வாய்ப்பு இருந்திருக்கும் ஏன்னா நான் படிச்ச பள்ளியில் ஹிந்தி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். பள்ளியில் நான் சேர்ந்த பொது ஹிந்தி சார் ஹிந்தி சார்னு எல்லோரும் சொல்லுவாங்க ஆனா அவர் ஹிந்தி வகுப்பு எடுக்க வில்லை வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்தார் அப்புறம் ஏன் ஹிந்தி சார்னு சொல்லுறாங்கன்னு கேட்டேன் அதற்கு ஒருவர் சொன்ன பதில் .

எங்கள் பள்ளி ஒரு மேனஜ்மென்ட் பள்ளி எங்க அப்பா காலத்தில் இருந்து இருக்கிறது ஒரு நேரத்தில் ஹிந்தி கட்டாயப்பாடமாக கொண்டுவரப்பட்ட பொது அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் . சில நாளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துள்ளது . அதற்கு அப்புறம் ஹிந்தி கட்டாயப்பாடமாக இல்லை அதனால் வரலாறும் இங்கிலீஷ் ம்ம் எடுத்திருக்கிறார் .

இப்ப நான் சொல்ல வரது என்னன்னா நம்ம தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்துக்கு போனா அந்த மாநிலத்தோட மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லது நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்
இப்போது நான் இருக்கும் மலசியாவில் தமிழர்கள் ,சீனர்கள் .மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள் அவரவர்களுக்கு தாய் மொழி இருந்தாலும் மலாய் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
நம்ம நிலைமை மோசம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு
எம் .பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க ஆனா நாம ... ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் .........

Sunday 22 March, 2009

சினிமா சமுதாயத்திற்கு

என்ன செய்கிறது ?


இன்று மலேசிய தமிழ் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த விஷயம் மலேசியாவில் வழிப்பறி , கொலை, கொள்ளை எல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது
என்று பயத்தோடும் முக்கியமாக தமிழ் இளைஞர்கள் ஈடுபடுவதால் கவலையோடும் கூறிக்கொண்டு இருந்தார் . சினிமாவை பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்றார் எண்பதுகளில் இந்தநிலைமை இல்லை என்றார்.
சினிமா ஒரு காரணமாக இருக்க முடியுமா?
சினிமாவில் என்ன நடக்கிறது ஹிரோ ரோல் பத்து பதினைந்து பேர அடிக்கிறதும் வில்லன்கிட்ட இருந்து ஹிரோயினையும் மக்களையும் காப்பாதுறதும் இது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா நிச்சயமாக இல்லை ஆனால் வில்லன் ரோல் பத்து பதினைந்து பேர கூடவச்சிக்கிட்டு
கொள்ளையடிக்கிறது ஒரு பெண்ணை கற்பழிக்கிறது இது எல்லாம் நடைமுறையில் சாத்திய மாகிறது வில்லன் ரோல் பார்த்து பார்த்து அந்த மாதிரி நாம ஏன் செய்யக்குடாது என்ற எண்ணம் வந்து விடுகிறது போல .
வில்லன் ரோல் மக்கள் முக்கியமாக இளைஞர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது . ஒரு சிலர் சினிமாவில் நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் கெட்ட விஷயத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லலாம் ஆனால் நுற்றுக்கு இருபது சதவிகிதம் பேர்தான் நல்ல விஷயத்தை எடுத்துக்குற பக்குவத்துல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்
அந்த என்பது சதவிகிதம் பேரோட நிலைமை என்ன ?

சில நாள்களுக்கு முன் கார்த்திகைபாண்டியன் அவர்கள் விளம்பரங்கள் சில மோசமாக இருக்கிறது என்று பதிவு போட்டிருந்தார் அதற்கு ஆதவா அவர்கள்
சில விளம்பரங்களில் தீம் நன்றாக இருக்கிறது என்று கருத்து சொல்லியிருந்தார் தீமை நானும் நீங்களும் ரசிப்போம் ஆனால் மக்கள் .

பி . கு : மன்னிக்க வேண்டும் ஆதவா சார் இந்த பதிவு போடும் பொது
அன்று படித்தது நினைவில் வந்தது நீங்கள் தவறாக என்ன வேண்டாம்
அப்புறம் நம்ம பதிவு எப்படி இருக்கிறது தவறு இருந்தால்
சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் .

Saturday 7 March, 2009

கனவு
இது இல்லையென்றால்
மனிதனின்
வாழ்க்கையில் முழுமையும்
இல்லை
-----------------------------------------------------------------
வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது

Friday 13 February, 2009

நானாக நீ....


ஒரு
தொலைதூர பயணத்திற்காக ரயில்
நிலையத்தில் காத்திருந்த தருணத்தில்
என்னை நோக்கி குழந்தையுடன் வந்த அவள் ...
நான்கு வருடங்களுக்கு முன்
என்னுள் பலமுறை தன் உதடு பதித்தவள்
ஏமாற்றங்களையே அதிகமாக சந்தித்த இதயம்
என்று தெரிந்ததாலோ என்னவோ
என் காதலை சொன்னவுடன் ஏற்றுக்கொண்டவள்
அன்றும் சரி இன்றும் சரி
என் தனிமை இரவுகளின் அமைதியில்
அருகில் இருப்பதும் அவள் நினைவுகள் மட்டுமே
ஆம் அவள் என் அவளே தான் ...
அருகில் வந்த அவள் வழக்கமான
நலம் விசாரிப்புகளுக்குப் பின்
" நான்
இன்றும் உன்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்ற நம்பிக்கையில் தான்
அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் உன்னைப்போல் இந்த சமுதாயம்
தனிமையில் வாழ சம்மதித்திருந்தால்
நானாக நீ.... வாழ்ந்திருப்பாய் என்னுள் "
என்று கூறி சட்டென விலகி சென்றாள்.